Wednesday, March 12, 2008

Sujatha_ Hon'ble

திரு சுஜாதா அவர்களுக்கு...
உங்களை நான் அறிவேன். இப்போது தாங்கள் எங்கும் நிறைந்த தன்மையில் கலந்து இருப்பதால் என்னை அறிந்து கொள்ளக் கூடும். ஒரு இருபத்தைந்து வருட அறிமுகம் நமக்குள்ளே இருந்தது எழுத்துக்கள் வாயிலாக.

வெகுஜன பத்திரிக்கைகள் வியாபார தந்திரத்தில் உங்களை வளைத்துப்போட, அதில் சிக்கினாலும் எங்களின் சிந்தனை சிக்கலை வெகு சுலபமாக அவிழ்த்து ஆரம்பமும் ,முடிவும் எங்கள் கையிலே தந்து வியக்க வைத்த நீங்கள்; வித்தகர்.

சுமாராக இன்னமும் கூட இருபது வருடங்கள் நுட்பத்திறன் வித்தியாசத்தில் வேகமாக வளர்ந்து வரும் என்போன்றோர்க்கு (அதிமேதாவிகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை) எண்பதுகளின் களத்தில் உயர்த்திய கைகளை இறுக பற்றி புதிய பல செய்திகளை தந்தீர்கள்.

இங்கே, இப்போது "கற்றவர்களும், பெற்றவர்களும்" சகட்டு மேனிக்கு தூற்றிக்கொண்டு இருக்கின்றனர். அது அப்படித்தான்.

"மனித வாழ்க்கை, மரணத்திற்குப்பின் திருத்தப்படும் மாபெரும் கவிதை" என்று சொன்னரே சொல்வித்தகர் திரு. வலம்புரி ஜான்... இதெல்லாம் சகஜமப்பா. உங்களுக்கு தெரியாதா என்ன?

என்னை பொறுத்தவரை உங்கள்மூலமாக நான் அறிந்து கொண்ட செய்திகள் நிறைய. நான் எதுவும் கைமாறு செய்யப்போவதில்லை. இந்த நன்றியும், வாழ்த்தும் தவிர.

ஒரு தனி மனிதன் எவ்வகையிலும் தனித்து இவ்வுலகில் வாழவே முடியாது. எதாவது ஒரு வழியில் இந்த சமுகம், சமுகம் சார்ந்த மனிதர்கள் அவனுக்கு உதவியிருப்பர்கள் அல்லது உதவுவார்கள். தன் சுயம்பு என்று ஒரு சிலை சொன்னலாவது கோயில் கட்டி கும்பிடுவார்கள். ஒரு மனிதன் சொன்னால் கையில் குணநலன் மருத்துவரை பற்றிய தகவல் தந்து அனுப்பிவைப்பார்கள். ஆக தனிமனித அறிவு, ஆற்றல் இந்த சமுகத்தை சார்ந்தே இருக்கிறது. யாரேனும் ஒருவரோ, பலரோ அந்த சமுகத்தில் இருந்து தனியாக ஒளி வெள்ளத்திற்கு வந்துவிடுகிறார். யார்யாரென நாமும் அறிவோம்.

உங்களிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன் என்பதில் எனக்கென்ன வெட்கம்?

சொல்லுபவரிடம் இருந்து எல்லா செய்தியையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எப்போதும் இருந்ததில்லை. அவர்களும் எதிர்பார்ப்பதில்லை.
( ஊருக்காகவே உழைக்கும் அரசியல்வாதிகளை தவிர )
மிகப்பெரும் ஞானிகள் கூட என்செய்தியை பத்தோடு பதினொன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், யோசித்து பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள் என்பார்கள்.
( ஞானி வேஷம் போட்டவர் இல்லை சார் )

ஒரு தந்தையாக, ஆசிரியனாக, நண்பனாக எனது எல்லா கற்பனைக்கும் தகுந்த வடிவம் எடுத்து நிரம்பினீர்கள். திரு.லேனா தமிழ்வாணன் சொன்னது போல "அவர் அந்த காலத்து ஆளுப்பா என்று ஒதுக்கித்தள்ள முடியாத ஆளுமை அவரிடம்"

நன்றி, தங்களுக்குரிய ஆசனம் என்றும் காலியாகவேதான் இருக்கும். எதற்கும் முடிந்தால் ஒரு எட்டு வந்துவிட்டு போங்கள்.

நட்புடன்...

0 comments:

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP